உணவுப் பாதுகாப்பு – தேசிய அளவில் தமிழக உணவுப் பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் முதலிடம்..!

Scroll Down To Discover

உணவுப் பாதுகாப்புக்கான செயல்பாடுகளில் தேசிய அளவில் தமிழக உணவுப் பாதுகாப்பு துறை முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமாருக்கு விருது வழங்கினார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், நாடுமுழுவதும் உள்ள மாநில உணவுப் பாதுகாப்புத் துறைகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை, உணவுப் பாதுகாப்பு குறியீடு மூலம் இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் மதிப்பீடு செய்தது. இதில், தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட ‘‘eat right challenge’’ என்ற போட்டியில், நாடு முழுவதும் இருந்து 150 மாவட்டங்கள் பங்கேற்றன.

அதில், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள், சிறந்த செயல்பாட்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

இதையடுத்து, டெல்லியில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் செந்தில்குமாரிடம், தமிழகம் முதல் மாநிலமாகத் தேர்வுசெய்யப்பட்டதற்கான விருது, சிறப்பாக செயல்பட்ட 11 மாவட்டங்களுக்கான விருதுகளை வழங்கினார்.