ஈ-சிகரெட் விற்கும் இணையதளங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை – 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ்

Scroll Down To Discover

இந்தியாவில் ‘ஈ-சிகரெட்’ எனப்படும் மின் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈ-சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட 15 இணையதளங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், மின் சிகரெட் விற்பனையையும், அதுதொடர்பான விளம்பரத்தையும் நிறுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை தொடர்ந்து, 15 இணையதங்களில் 4 இணையதளங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. மற்ற இணையதளங்கள் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த இணையதளங்கள் பதில் தெரிவித்து, சட்டத்துக்கு உட்படவில்லை என்றால், அவை மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படும். அந்த இணையதளங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.

மின் சிகரெட் விற்பனை தொடர்பாக மேலும் 6 இணையதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.