ஈஷா சார்பில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாய களப் பயிற்சி..!

Scroll Down To Discover

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோபியில் ‘பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் விவசாய களப் பயிற்சி 2 நாட்கள் நடந்தது. பிரபல பூச்சியியல் வல்லுனர் தசெல்வம் அவர்கள் இப்பயிற்சியை நேரடியாக நடத்தினார்.

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக ஈஷா விவசாய இயக்கம் பல்வேறு விதமான களப் பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா மேவானி கிராமத்தில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் ’பூச்சிகளை கவனிங்க’ என்ற தலைப்பில் 2 நாள் களப் பயிற்சி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்
பங்கேற்றனர்.

அவர்கள் பல்வேறு வகையான பூச்சி வகைகளின் தன்மைகள் மற்றும் பயன்களை அனுபவப்பூர்வமாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகள் தனிக் தனி குழுவாக பிரிந்து சென்று பண்ணையில் இருந்த பூச்சிகளை பார்வையிட்டனர். மேலும், காலையில் பூச்சிகளை பிடித்து வந்து ஆய்வு செய்தனர்.

பூச்சிகளின் உடல் அமைப்பு பற்றி விரிவாக புரிந்துகொள்வதற்காக விவசாயிகளே பூச்சிகளின் படங்களை வரைந்தனர். குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கும் வழிமுறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆகியவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகளின் அதீத பயன்பாட்டால் தான் பயிர்களில் விஷத்தன்மை அதிகரிக்கிறது. ஆகவே, இதை முற்றிலும் தடுக்கும் விதமாக இயற்கை முறையில் பூச்சிகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.