ஈஷா அவுட்ரீச் சார்பாக, சேலத்தில் ஈஷா கிராம மருத்துவமனை, குள்ளப்ப நாயக்கனூரில் ஜூலை 8 அன்று “நலம்” என்ற தமிழ் மருத்துவ பயிற்சியும் அதை தொடர்ந்து ஜூலை 9 அன்று சித்த மருத்துவ ஆலோசனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பாரம்பரியமான மருத்துவ முறை குறித்த பயிற்சி ஒவ்வொரு மாதமும் சேலம் குள்ளப்ப நாயக்கனூரில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பயிற்சியின் போதும் 3 விதமான மூலிகைகள், ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் வாழ்வியல் முறை குறித்து பயிற்சி நடத்தப்படுகிறது. நேற்று இந்த தொடர் பயிற்சியின் மூன்றாம் அமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதுமட்டுமின்றி முந்தைய பயிற்சியில் பங்கேற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் ஜூன் 8 அன்று நடைபெற்ற பயிற்சி அமர்வில் துளசி, ஆடாதோடை மற்றும் தூதுவளை ஆகிய மூன்று மூலிகைகள் குறித்தும், பஞ்ச பூதங்களுக்கும் மனித உடலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு மற்றும் கை வைத்தியத்திற்கு உதவும் மின்சார ரசம், ஆடாதோடை மணப்பாகு, பிருந்தா பல்பொடி, தூதுவளை நெய் ஆகியவற்றை குறித்தும் ஆழமாக அறிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஜூலை 9 அன்று நடைபெற்ற சித்த மருத்துவர் ஆலோசனை நிகழ்வில் பலர் பங்கேற்று பயன் பெற்றனர். நீரிழிவு, மன அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், மூட்டு வலி, தோல் பிரச்சனை உள்ளிட்ட தீராத நோய்கள் உள்ள மக்களுக்கு ஆலோசனை வழங்குவதில் இந்த மருத்துவமனை கவனம் செலுத்துகிறது.
தமிழ் மருத்துவ பயிற்சியான “நலம்” மற்றும் சித்த மருத்துவர் ஆலோசனை ஆகிய இரு நிகழ்வுகளையும் ஈஷா சம்ஸ்கிருதியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். இந்த சமூகத்தில் ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள இவர்கள், பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...