இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு அளித்தது கேரள அரசு.!

Scroll Down To Discover

கடந்த 1994-ம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த விவகாரம் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்மீது தவறு இல்லை என்று கண்டறிந்து சி.பி.ஐ. விடுவித்தது.

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை சுமுகமாக முடிக்க, கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்தது. அந்த அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரளஅரசு முடிவு செய்தது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு, கடந்த ஆண்டு வழங்கியது. இந்நிலையில், கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு சிபாரிசின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ1.30 கோடியை இழப்பீடாக கேரள அரசு வழங்கியது.