இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி : திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்..!

Scroll Down To Discover

இலங்கை தமிழர்களுக்கு தூத்துக்குடி யாசகர் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி (65). யாசகரான இவர் கொரோனா நிவாரண உதவியாக 10 ஆயிரம் வீதம் பல முறை நிதி உதவி வழங்கியுள்ளார்.

இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். இலங்கை தமிழர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் விசாகனிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘நான் பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பணியாற்றினேன். அப்போது அங்கு பல சமூக சேவை செய்துள்ளேன். 2 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டுள்ளேன்.

இச்சூழ்நிலையில் மீண்டும் தமிழகம் வந்து யாசகம் செய்து, அதில் கிடைத்த பணத்தை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கி உள்ளேன். மேலும் கொரோனா நிதி உதவியை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி கலெக்டர்களிடம் வழங்கி உள்ளேன். தற்போது திண்டுக்கல் கலெக்டர் விசாகனிடம் இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளேன்’’ என்றார்.