இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.
இராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், கைங்கர்யம், பாராக்காரர்கள் என 89 பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குப் புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கென ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதமும் கோயில் நிர்வாகத்தின் மூலம் குறிப்பிட்ட சதவிகிதமும் மாதந்தோறும் எடுக்கப்பட்டு ராமேஸ்வரம் ஸ்டேட் வங்கியில் எலக்ட்ரானிக் பரிவர்த்தனை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய கோயில் ஊழியர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகையும் சரிவர கிடைக்கவில்லை.இதையடுத்து வருங்கால வைப்பு நிதி கணக்கு குறித்து இணை ஆணையர் கல்யாணி ஆய்வு மேற்கொண்டார்.
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஊழியர்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதியை, கோயில் அலுவலகத்தில் கணினி பிரிவில் வேலை பார்த்து வந்த, சிவன் அருள்குமரன் என்பவர் போலி ரசீது தயாரித்து 74 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீதும் , கணக்கர் ரவிந்திரன் மீதும், காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குற்றபிரிவு ஆய்வாளர், குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
இந்நிலையில் சிவன் அருள்குமரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ராமநாதபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் கோரியிருந்தார் சிவன் அருள்குமரன். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிவன் அருள்குமரனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், விரிவான விசாரணை மேற்கொள்ளும் வகையில் இந்த வழக்கினை ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்ற உத்தரவிட்டார்.
Leave your comments here...