இராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலவர் படம் வெளியான விவகாரம்: கோவில் தலைமை அர்ச்சகர் பணியிட நீக்கம்..!

Scroll Down To Discover

இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் கருவறையில் இருக்கும் இராமநாதசாமியின் புகைப்படம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியது. ஆகமவிதியின்படி மூலவரை புகைப்படம் எடுக்கக்கூடாது. இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, மூலவரான சிவலிங்கத்தை கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் அனுப்பி பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் கருவறையில் மூலவரை படம் பிடித்த அர்ச்சகர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. வடமாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வந்த மவுன சாமியார் 48 நாட்கள் அங்கு தங்கி தியானம் செய்ததாகவும், அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவில் பூஜை நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் கல்யாணி விசாரணை நடத்தியதில் புகைப்படம் கோவில் கருவறையில் எடுக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து தலைமை அர்ச்சகர் விஜயகுமார் போகில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலில் பணிபுரிந்துள்ளார்.

ஆனால் கருவறை லிங்கத்தை புகைப்படம் எடுத்து விற்பனை செய்ததாக எழும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தெரியாது. இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்குள் செல்லும்போது எப்படியோ என்னையும் அறியாமல் புகைப்படம் பதிவாகியுள்ளது” என விளக்கம் அளித்தார். சமீபத்தில் செல்போனை மாற்றிவிட்டதாகவும், வேறு யாரோ தான் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் எனவும் அவர் கூறினார்.