இந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை – பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆணையம் கடும் கண்டனம்!

Scroll Down To Discover

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வரும் நிலையில் சிறுபான்மை மக்களுக்கு உணவு, மருத்துவம் மற்றும் நிவாரண உதவிகள் கிடைப்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச மத சுதந்திர ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் 5,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 93 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் ஊரடங்கு காரணமாக வீடுகளில் உள்ள மக்களுக்கு சைலானி சர்வதேச அறக்கட்டளை சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், இங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.


இது மிகவும் கண்டிக்கத் தக்கது என தெரிவித்துள்ள அந்த ஆணையம், மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் கிடைக்க இம்ரான் கான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.