புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, அமெரிக்கவாழ் சீக்கியர்களும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தை நோக்கி, கார்களில் சீக்கியர்கள் பேரணியாக சென்றனர். இதில், மேரிலாண்ட், விர்ஜீனியா, நியூயார்க், நியூஜெர்சி,
பென்சில்வேனியா, இண்டியானா, ஒஹியோ மற்றும் வட கரோலினா உள்ளிட்ட மாகாணங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள் பங்கேற்றனர். அமைதியாக நடந்த இந்த பேரணியில், ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதில், காலிஸ்தான் கொடிகளுடன் இருந்த பிரிவினைவாத சீக்கியர்கள், வன்முறைகளை அரங்கேற்றினர். வாஷிங்டனில் உள்ள மஹாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் செயல்களில், காலிஸ்தான் ஆதரவு சீக்கிய இளைஞர்கள் ஈடுபட்டனர். சிலை நிறுவப்பட்டிருந்த பீடத்தின் மேல் ஏறிய அவர்கள், காந்தி சிலையின் முகத்தில் பசையை வைத்து, ‘போஸ்டர்’ ஒன்றை ஒட்டினர்.
இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி, சிலை முழுதும், கண்டன போஸ்டர்களை ஒட்டினர்.அங்கு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவுகுழு, துாக்கு கயிற்றுடன் பிரதமர் நரேந்திர மோடி, இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட உருவப்படத்தை, காந்தி சிலையில் ஒட்டினர்.இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார், அங்கிருந்தோரை கலைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு, இந்திய துாதரகம், கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை, இந்திய துாதரகம் வலியுறுத்தியுள்ளது.இந்த காந்தி சிலை, 2000ல், அமெரிக்கா வந்திருந்த அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயால் திறந்துவைக்கப்பட்டது.
Leave your comments here...