இந்தியாவில் 33 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை – மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

Scroll Down To Discover

கொரோனா பிரச்சினையால் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒரு தனியார் செய்தி நிறுவனம் கேள்வி கேட்டிருந்தது.

இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சினையை கண்காணிக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘போஷான் ட்ராக்கர்’ என்ற செயலியில் 34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பதிவு செய்த விவரங்கள் அடிப்படையில் இந்த தகவலை அளித்துள்ளது.

கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதிப்பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம்பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். இவர்கள் 1 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள் ஆவர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 9 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில் இது ஓராண்டில் 91 சதவீத உயர்வு ஆகும்.

மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலம் 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்ட 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகளுடன் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது.