இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது – கோவையில் பிரதமர் மோடி பேச்சு

Scroll Down To Discover

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 10.20 மணியளவில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டார். அங்கு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார்.புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்.இதற்காக சென்னை வந்த அவர், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார். கோவையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.


பிரதமர் மோடியை முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கினர்.தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை. கோவையில் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.இதன்பின்னர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி:- ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணித்தார்.ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது


இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 ‘ஸ்மார்ட்’ நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி :- மிகப்பெரிய தொழில் நகரமான கோவையில் இருப்பது மகிழ்ச்சி. இது தொழில் நகரம். புதுமைகள் படைக்கும் நகரம். கோவைக்கும், தமிழகத்திற்கும் நன்மை பயக்கும் வளர்ச்சி திட்டங்களை துவக்கியுள்ளோம். பவானி சாகர் அணையை நவீனப்படுத்துவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் ஏக்கர் அதிகமான நிலம் நீர்பாசன வசதி பெறும். ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்கள் பயன்பெறும். விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. தொழில் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் முக்கியம். வளர்ச்சியும், சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதில் பெருமைப்படுகிறேன். 3 ஆயிரம் கோடி ரூபாயில் 709 மெகாவாட் சூரிய மின்சாரத்திட்டம் மூலம் 4 மாவட்டங்கள் பயன்பெறும். நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 65 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்படும்.

கடல்சார் வணிகம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது தமிழகம். கப்பல் போக்குவரத்தில் வ.உ.சிதம்பரத்தின் தொலைநோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது. வஉசி துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் 2015 முதல் 2035ம் ஆண்டு வரையில் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. துறைமுகங்களை நவீனமயமாக்கல், துறைமுகங்கள் உருவாக்கல், துறைமுகம் தொடர்புடைய தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை அடங்கும். ஸ்ரீபெரும்பதூர் அருகே மப்பேட்டில் சரக்குகளை கையாள புதிய பூங்கா அமைக்கப்படும். நம் மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் துவக்கம். இதன் ஒரு பகுதியாக 332 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4,114 வீடுகளை திறந்து வைத்தததை பெருமிதமாக கருதுகிறேன்.

தமிழகம் அதிக நகர்ப்புறங்களை கொண்ட மாநிலம். நகர்ப்புற வளர்ச்சியில் அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. தனிநபரின் கண்ணியத்தை உறுதி செய்வதே வளர்ச்சியின் மையக்கரு. வளர்ச்சியின் முக்கிய பங்காக அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டங்களினால் தமிழகத்தின் வாழ்த்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் உந்துசக்தியாக விளங்கும். தற்போது துவங்கப்பட்ட திட்டங்களினால், ஒட்டு மொத்த தமிழகமும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.