இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் : சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்துக்கு 2-வது இடம்.!

Scroll Down To Discover

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்ட சிறந்த 10 காவல் நிலையங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் காவல் நிலையங்களின் பணியை மேலும் ஊக்குவிக்கவும், அவற்றுக்கிடையே போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் நிலையங்களை இந்திய அரசு தேர்வு செய்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தில் உள்ள நோங்போக்சேக்மாய் காவல்நிலையம் முதலிடத்தையும், சேலம் மாநகரத்தில் உள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தையும், அருணாச்சலப் பிரதேசத்தில் சங்லாங் மாவட்டத்தில் உள்ள கர்சாங் காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும், சட்டீஸ்கர் மாநிலத்தின் சுராஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஜில்மிலி காவல் நிலையம் நான்காவது இடத்தையும், கோவா மாநிலத்தின் தெற்கு கோவா மாவட்டத்துக்குட்பட்ட சங்குவம் காவல் நிலையம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இவற்றைத் தொடர்ந்து அந்தமான், நிக்கோபார் தீவுகள், சிக்கிம், உத்தரப் பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல் நிலையங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த பத்து காவல் நிலையங்களுள் சூரமங்கலம் மட்டுமே அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது தமிழகத்துக்குக் கிடைத்துள்ள மற்றொரு சிறப்பம்சம்.

நாட்டில் இயங்கும் 16,671 காவல் நிலையங்களில், தரவு பகுப்பாய்வு, நேரடி கண்காணிப்பு, பொதுமக்களின் பின்னூட்டத்தைக் கருத்தில் கொண்டு சிறந்த 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.