இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஹாங்காங் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கொரோனா ஒழிப்பு, தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த இத்திட்டம், பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 18 வயதுடையோர் என இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் , கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 78 சதவீத திறன் வாய்ந்ததாக இருப்பதாக கோவாக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த 3ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது.
அத்துடன் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவாக்சின் மிகவும் பொருத்தமானது என தெரிவித்தது.
இதனிடையே ஏற்கனவே கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 96 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அந்த பட்டியலில் இப்போது ஹாங்காங்கும் சேர்ந்துள்ளது. இதன் மூலம் கோவாக்சினை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.
Leave your comments here...