ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் “2018” மலையாள திரைப்படம் தேர்வு – இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு!

Scroll Down To Discover

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018 எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ’ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ படம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த படம் விருது பெறவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் சிறந்த பாடலுக்கான பட பிரிவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.