ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டன. சென்னையில் 2வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றிய முதல்வர் ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறு சாதனையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
இதன்பின் கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக ஆளுநர் மாளிகை வந்த முதலமைச்சரை ஆளுநர் வரவேற்றார். முதல்வரோடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், அரசு செயலாளர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்ளாத நிலையில், பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். திரைப் பிரபலங்கள், பல்கலைக் கழக உயர் அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பலர் இவ்விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் புத்தாண்டில் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் சுதந்திர தின விழாவில் ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்றது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Leave your comments here...