ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் காரணமாக விராட் கோலி கைது செய்யப்படாதது குறித்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், அவர் உயிரிழந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்காதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.
இந்த கூட்ட நெரிசலுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது சமூக ஆர்வலர் எச்.எம்.வெங்கடேஷ் புகாரளித்தார், ஆனால் கோலி மீது எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து #ArrestKohli என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தது. அதேபோல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் லண்டனுக்கு புறப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனிதாபிமானத்தையும் பலர் கேள்வி எழுப்பினர். மேலும், கடந்த டிசம்பரில் ஹைதராபாத் தியேட்டரில் ‘புஷ்பா – 2’ படத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்றும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.
ஹைதராபாத் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்து அவரது இளம் வயது மகன் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போதைய சம்பவத்துக்காக கோலியை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், ‘விராட் கோலி இறந்த ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தாரா?. விசுவாசமான ரசிகர்களின் குடும்பங்களைச் சந்திக்க லண்டன் பயணத்தை அவர் தாமதப்படுத்தியிருக்க முடியாதா?. அவர் எப்படி இவ்வளவு மனிதாபிமானமற்றவராக இருக்க முடியும்? தீபாவளியின் போது விளம்பரங்களுக்காக மட்டுமே அவர் தனது மனிதாபிமானத்தைக் காட்டுகிறாரா?. இதுபற்றி நீங்கள் கவலைப்படுவதாகக் கூட தெரியவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா, தனது அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜுவை பணிநீக்கம் செய்தார். அவர் இதுகுறித்து எந்த காரணங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் மாநில சட்டமன்றத்தில் ஆர்சிபியின் பாராட்டு விழாவிற்கு கோவிந்தராஜுதான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கோவிந்தராஜு தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகிகள், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த டிஎன்ஏ மற்றும் கிரிக்கெட் அமைப்பின் உயர் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய சித்தராமையா வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டதை அடுத்து, மூன்று டிஎன்ஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், ஜூன் 16 ஆம் தேதி வரை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மூன்று மூத்த அதிகாரிகளை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Leave your comments here...