ஆருத்ரா மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை வருகை..!

Scroll Down To Discover

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது.

இதனை உண்மை என்று நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது. இந்த நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அனால் அவர் ஆஜராகவில்லை.

இதை திரும்பப் பெற கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆர்.கே. சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் இன்று துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் உடனடியாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மோசடி வழக்கு தொடர்பாகத்தான் நான் ஆஜராக வந்துள்ளதாக கூறினார்.

இதில் பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் அளித்த உறுதியின் பேரில் விமான நிலையத்தில் இருந்து செல்ல அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்க படுகிறது.