ஆபரேஷன் காவேரி – சூடானிலிருந்து 530 இந்தியா்கள் மீட்பு..!

Scroll Down To Discover

சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு தொடங்கிய ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ் இதுவரை 530 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ள

சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சூடானில் நிலவரம் மிகவும் பதற்றமாக உள்ளது. இந்திய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். விரைவில் அங்கிருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக கப்பல்களையும் விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த மோதலை தொடா்ந்து அந்நாட்டில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

சூடானிலிருந்து மீட்கப்படும் இந்தியா்கள் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, இந்திய கடற்படையின் ‘சுமேதா’ போா்க் கப்பல் மூலமாக சூடானின் போா்ட் சூடான் நகரிலிருந்து 278 இந்தியா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டனா். அதனைத் தொடா்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான அதிக எடைகளைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்ட இரண்டு சி130ஜே போா் விமானம் மூலமாக 250 இந்தியா்கள் மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெசங்கா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமானப் படையின் முதல் விமானம் மூலமாக 121 இந்தியா்களும், இரண்டாவது விமானம் மூலமாக 135 இந்தியா்களும் மீட்கப்பட்டுள்ளனா். ‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ் இந்தியா்களை மீட்கும் பணி தொடா்ந்து துரிதப்படுத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.சவூதியில் கட்டுப்பாட்டு அறை: இந்தியா்களை மீட்கும் பணியை மேற்கொள்ள வசதியாக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை ஒன்றை இந்தியா அமைத்துள்ளது. மேலும், மீட்புப் பணிகளை கண்காணித்து முறைப்படுத்துவதற்காக வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளாா்.