ஆந்திராவில் நடந்த கொடூரம் – பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்து அட்டூழியம்!

Scroll Down To Discover

ஆந்திராவில் சிறுமி மீதான காதல் போட்டியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நபரை 9 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கி அவர் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்தேரியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த ராம் ஆஞ்சனேயலு என்பவரும் பழங்குடியின இளைஞர் ஒருவரும் சிறு வயது தோழர்கள். இவர்கள் மீது ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரே சிறுமியை இவர்கள் இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்படவே சமாதானம் பேச பழங்குடியின நபரை ராம் ஆஞ்சனேயலு தனிமையான இடத்திற்கு அழைத்துள்ளார். அங்கு ராம் ஆஞ்சனேயலு தனது நண்பர்கள் 8 பேரை சேர்த்துக் கொண்டு அந்த பழங்குடியின நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

அப்போது அங்கு குடிபோதையில் இருந்த இருவர் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி நடந்துள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்வு நடந்த போது தாக்குதல் நடத்திய குழுவை சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அநாகரீகமான அந்த கொடூர தாக்குதல் குறித்து அனைவருக்கும் தெரியவந்தது.

இதனை அடுத்து கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் 6 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம் ஆஞ்சனேயலுவும் ஒருவர் ஆவார். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதில் இருவர் சிறுவர்கள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி கடும் அதிவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திராவிலும் அதே போன்ற கொடூரம் நடந்தேரியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.