அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Scroll Down To Discover

அனுமதியின்றி அரசின் சின்னம், பெயரை பயன்படுத்தினால், ஒரு மாதத்துக்குள் அகற்றும்படி விளம்பரப்படுத்த, டி.ஜி.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய சின்னங்கள், முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு ஒட்டப்பட்டுள்ள அல்லது வைக்கப்பட்டுள்ள முத்திரைகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என தமிழக டி.ஜி.பி., பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அதைப் பின்பற்றாதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும், விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக டி.ஜி.பி. 2 வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற 21-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.