கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே, ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து, “அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடத்தப்பட வேண்டும். இது மகிழ்ச்சிக்கான, ஆர்ப்பரிப்புக்கான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பெருமைமிகு பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி மூலம் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ராமர் கோயில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்குப் பின் நிறைவேறுகிறது என்றும் இது மற்ற கோவில்களைப் போல் சாதாரணக் கோவில் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் இந்தப் பூமி பூஜைக்குச் செல்ல லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை நாம் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave your comments here...