அயோத்தி தீர்ப்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் : திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன்காந்தி,  மீது வழக்குப்பதிவு

Scroll Down To Discover

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்கள் மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  26 பேர் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.