அயோத்தியில் ராமர் கோவில் அருகே சரயு நதிக்கரையில் ஆதிசங்கரருக்கு கோவில்..!

Scroll Down To Discover

அயோத்தியில் ராமர் கோவில் அருகே சரயு நதிக்கரையில் ஆதிசங்கரருக்கு கோவிலும், அவரது அத்வைத கொள்கையை பலரும் அறியும் வகையில், 15 ஏக்கரில் அகில உலக ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது.

ஆதிசங்கரர் கி.மு., 508ம் ஆண்டு, காலடியில் தோன்றி சனாதன தர்மத்தை உயிர்ப்பித்தார். ஜீவாத்மாக்கள் அனைத்தும், இறைவனான பரமாத்மாவின் அம்சமே என்ற அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். அவர் ஸ்தாபித்த நான்கு பீடங்களில் முதன்மையானது, கர்நாடகா சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ சாரதா பீடம். அதன் பீடாதிபதி, ஜகத்குரு பாரதி தீர்த்த மஹா சன்னிதானம். இவர், அயோத்தியில் ராமர் கோவில் அமையும் இடத்தில் ஆதிசங்கரர் கோவிலும், அவரது அத்வைத வேதாந்த கொள்கையை அனைவரும் அறியும் வகையில் ஆராய்ச்சி மையமும் அமைய வேண்டும் என, தன் விருப்பத்தை சக மடாதிபதிகளிடம் வெளிப்படுத்தினார்.

சங்கராச்சார்ய வஜ்மய சேவே பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளை மடமான யடத்துார் மடத்தின் ஸ்ரீ சங்கர பாரதி சுவாமிகள், ஜன., 29ல் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பாரதி தீர்த்த மஹா சன்னிதானத்தின் விருப்பத்தை தெரிவித்தார்.

அதன் பலனாக, அயோத்தியில் ராமர்கோவில் அருகில் சரயு நதிக்கரையில், 15 ஏக்கரில் ஆதிசங்கரர் கோவிலும், ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது. மையத்தின் தலைமை புரவலராக, சிருங்கேரி சாரதா பீடாதிபதி இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பின் போது, அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் ரவீந்த்ர புரி, ஹரித்வார் மிருத்யுஞ்சய ஆஸ்ரமத்தின் சிதம்பரானந்த சரஸ்வதி சுவாமிகள், ராமஜன்ம பூமி திரித ஷேத்ர டிரஸ்ட் பொருளாளர் கோவிந்த தேவகிரி ஆகியோர் இருந்தனர். பிரதமருக்கு விசேஷ பிரசாதம் அளித்து, சுவாமிகள் ஆசி வழங்கினார்.