சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 8-வது முறையாகும்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், கடந்த செப்டம்பர் 29-ம் தேதியுடன் முடிவைடந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதைத்தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 13-ம் தேதிவரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Leave your comments here...