அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் – தமிழகம் முழுவதும் 100 வழக்குப் பதிவு..!

Scroll Down To Discover

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு 164 ஆண்டுகளாக நடைமுறையில் நேற்று வரை இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், மேற்கண்ட 3 புதிய சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழகத்திலும் இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது அப்தாப் அலி என்பவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து தப்பியதாக ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிதாக இன்று அமலுக்கு வந்துள்ள சட்டப்பிரிவு 304(2) என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதேபோல் சென்னை நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், கோட்டூர்புரம் என சென்னையில் 10 வழக்குகள் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோக தாம்பரம், ஆவடி காவல் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வழக்கு பதிவானது.

ஒட்டு மொத்தமாக, தமிழகத்தில் சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் 25 வயது பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்ததாக சாரதி (21) என்ற இளைஞரை புதிய சட்டப்பிரிவின் கீழ் முதன்முதலாக ஐஸ் ஹவுஸ் போலீஸார் கைது செய்துள்ளனர்.