அதிகரிக்கும் வெயில் தாக்கம் – பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு..!

Scroll Down To Discover

அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.