அதானி விவகாரத்தில் பாஜக பயப்பட எதுவுமில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

Scroll Down To Discover

அதானி விகாரத்தில் பா.ஜ., பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை; மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அச்சம் ஏதும் இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன்ஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்தார். அப்போது, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியையும், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ இயக்கத்தையும் ஒப்பிட்டு பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமித்ஷா, நான் பிஎப்ஐ-யும் காங்கிரசும் ஒன்று தான் என்று கூறவில்லை. பிஎப்ஐ மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிஎப்ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப்பெற்றது. நாங்கள் அதை தடுக்க முயற்சித்தோம். இதில் கவலைப்பட என்ன உள்ளது? நாங்கள் வெற்றிகரமாக பிஎப்ஐ அமைப்பை தடை செய்துவிட்டோம். பிஎப்ஐ மதமாற்றம், பயங்கரவாதத்தை பரப்புகிறது என நான் நம்புகிறேன். பயங்கரவாத செயலுக்கான மூலப்பொருட்களை தயாரிக்க பிஎப்ஐ முயற்சிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பல்வேறு செயல்களில் பிஎப்ஐ மேற்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பிஎப்ஐ தடை அரசியலுக்கு அப்பாற்பட்டது’ என்றார்.

நாடாளுமன்ற மேலவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி பேசும்போது, எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இதுபற்றி குறிப்பிட்ட அமைச்சர் அமித்ஷா, பிரதமரை ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது. சமூக ஊடக தளங்களை சென்று பாருங்கள். பிரதமர் மோடி உரைக்கு வரும் விமர்சனங்களை படித்து பாருங்கள். சில கட்சிகள் பிரதமர் உரையை கவனிக்க விரும்பாமல், அரசியல் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர் என கூறியுள்ளார்.

அதானி குழும விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு வசம் வழக்கு விசாரணை இருந்தால் மந்திரியாக இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை’ என்றார்.