அடுத்தாண்டுக்குள் 500 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி – ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் மோடி உறுதி

Scroll Down To Discover

அடுத்தாண்டு இறுதிக்குள் 500 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்கு உதவத் தயாராக உள்ளதாக, ஜி – 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளான ரஷியா, இத்தாலி, இந்தியா, சீனா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, தென்கொரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ‘ஜி-20’ அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகரான ரோம் நகரில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் உலகத்தலைவர்கள் பலரும் நேரில் பங்கேற்க, இந்த உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. முதலில் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் இந்த மாநாட்டின், ‘உலக பொருளாதாரம், உலக சுகாதாரம்’ என்ற அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார்.


அப்போது அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். இதில் தடுப்பூசி திட்டப்பணிகளை விவரித்த அவர், உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசி டோஸ்களை தயாரிப்பதற்கு இந்தியா தயாராக இருப்பதாக கூறினார். இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தால் இந்த திட்டத்துக்கு ஊக்கமாக அமையும் எனவும் பிரதமர் கூறினார்.

சர்வதேச பயணத்தை எளிதாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, இதற்காக தடுப்பூசி சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிக்கும் வழிமுறையை குறித்தும் பேசினார். முன்னதாக, இந்த மாநாட்டை நடத்துகிற இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ டிராகி வரவேற்று பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.


இதுபற்றி அவர் பேசுகையில் கூறியதாவது:- உலகின் ஏழை நாடுகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பூசிகளை பெறுவதற்கான முயற்சியை இரு மடங்கு ஆக்க வேண்டும்.பணக்கார நாடுகளில் 70 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் ஏழை நாடுகளில் 3 சதவீத மக்கள்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது தார்மீக அடிப்படையில் ஏற்கத்தக்கது அல்ல.

நாம் இன்றைக்கு சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளுக்கு ஒரே சிறந்த பதில், பன்முகத்தன்மைதான் என்பது தெளிவு. பல விதங்களில் இது ஒன்றுதான் சாத்தியமாகக்கூடிய பதில்.இவ்வாறு அவர் கூறினார்.