அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோவிலில் பொங்கல் விழா: வெளிநாட்டினர் பொங்கலிட்டு சூரியநமஸ்காரம்..!

Scroll Down To Discover

தமிழர் திருநாளான பொங்கல்பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் களை கட்டின. கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் கிராமமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, 251 பானைகள் வைத்து பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடினர். தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேப்போல் இந்த ஆண்டு  நடைபெற்ற விழாவில் டென்மார்க், ஸ்வீடன், ரஷ்யா, ஜெர்மன், பூடான் மற்றும் நேபாளம் நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுலா அலுவலக வளாகத்தில் இருந்து மேள, தாளம் முழங்க அகஸ்தீசுவரம் முத்தாரம்மன் கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு சங்குமாலை அணிவித்து வரவேற்றனர்.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 6 மணிக்கு சூரியநமஸ்காரம் தொடர்ந்து, 251 மண்பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டனர். மக்களுடன் இணைந்து வெளிநாட்டினர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, பரிசு வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.அதைத் தொடர்ந்து தமிழர்களின் கிராமியக் கலைகளான வில்லுப்பாட்டு, தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் ஆகியவை நடைபெற்றது. இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.