ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..!

ஆன்மிகம்தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா – பக்தர்களின்றி தங்கத் தேர் இழுக்க அனுமதி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை பூட்டப்பட்டதால் எந்த விழாக்களும் நடைபெறவில்லை. கோவிலுக்குள் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகின்றன.

தற்போது சிறுகோவில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போற்றப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோபுரம், பெரிய தேர், பெரியாழ்வார் பாடிய கோயில், பெரியகுளம், பெரிய பெருமாள் என்று பல பெருமைகளைக் கொண்டது.

இத்தகைய பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள் தான் ஆடிப்பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இந்த முறை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இந்த முறை விழாவை தடையில்லாமல் உள்ளேயே நடத்தவேண்டும் என்று அறநிலையத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி வரும் 24 ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Leave your comments here...